சொற்களும் பாவனைகளும்
தோற்றுப்போகும்
வெளிப்படுத்துதலில்
வெற்றி காண்கிறது முத்தமொழி
தளர்த்த சிரமமாகும்
இறுக்கங்களையெல்லாம்
இலகுவாய் அவிழ்க்கும் அபாரசக்தி
முத்தமொழிக்கு மட்டுமே உண்டு
ஓசைகளும் இசைகளாக
முத்தமொழியில் உரையாடும்போது
மவுனங்களிலும் அர்த்தங்களின் அடர்த்தி
கனத்த முத்தத்தின்
சப்தத்தில் ஒளிந்திருக்கிறது
ஆழ்மனதின் காடு
ஓசையற்ற ஓசைக்குள் ஒலிக்கும்
பெருங்கடலின் பெருமூச்சு
எல்லைகளின் மஹா சுவர்களை உடைத்து
உட்புகும் புரிதலின் பாஷை
எவருக்கேனும் உங்களை பகிரவிரும்பினால்
முத்தமிடுங்கள்
கனிவாய் பரிவாய் அழுத்த்த்தமாய்..
ஸ்நேகம் பொங்கும் எதிர்மையிலும்.
- அன்பாதவன், மும்பை
கீற்றில் தேட...
முத்தமொழி
- விவரங்கள்
- அன்பாதவன்
- பிரிவு: கவிதைகள்