
அந்த வெண்ணிற பூனையை
கவிதைப் புத்தகம் வாங்கச் செல்கையில்
சந்தடி நிறைந்த சாலையில்
சற்றும் பயமில்லாது
கருமைப் புகை உடலில் படாது
கடுகளவும் தயக்கமின்றி
கம்பீரமாய் கடந்து சென்றது
வழிவிட்டன வாகனங்கள்
கசங்கிய உடை அணிந்த மனிதன்
கல்லெறிவதாய் ஓங்கிய கை கண்டு
ஒளிந்தது ஒரு கடை அருகில்
தேடிய புத்தகம் கிடைத்த திருப்தியில்
விரும்பிய பாடல்
முணுமுணுத்த வண்ணம்
தனியே திரும்பினேன்
சட் சட் டென
வாகனங்கள் நிற்க
உடன் கூடிய கூட்டத்தின் நடுவே
வெண்ணிற உடலில்
சிவப்பு வண்ணம் தெறிக்கப்பட்ட நிலையில்
துடி துடித்துக் கிடந்தது
அப்பூனை
ஓவிய உடலாய்
காணப்பட்ட பூனை
குற்றுயிராய் சாலையின் நடுவே
ஓவியப் பூனை
மனிதனைப் போன்றே
கைகால்களை உதறியது உயிரை வேண்டி
ஸ்தம்பித்துக் கிடந்த
கூட்டத்தினிடையே
வந்தான்
அக்கசங்கிய உடையணிந்தவன்
குழந்தையை அணைப்பதாய்
அப்பூனையின் உடல் தாங்கி
ஓரம் கொண்டு செல்ல
சாலை எப்போதும் போல்
இயல்பாய் சீரானது
மனம் தான் தொலைத்து விட்டது
ஒரு இனிய கவிதையினை
வெண்ணிறம் காண்கையில் எல்லாம்
தொலைந்த கவிதையினைத் தேடிய வண்ணம்
- மதுமிதா (