
இனம் நிமிர ‘நாம் தமிழ்ர்
நாம் தமிழர்’ என்றார்த்த
தலைவன் எங்கே?
நினைவு முழுதும் தமிழாய்
தமிழினமாய் நின்றதமிழ்
நெஞ்சன் எங்கே?
தனைமறந்து செந்தமிழர்
தளைஅறுந்துபட நிமிர்ந்த
தமிழன் எங்கே?
அனல்வடிவாய் உலா எழுந்த
ஆதித்த னார்ஐயா
எங்கே? எங்கே?
சூடில்லை தமிழர்க்கு!
நேற்றுலகில் படைசூழ
வாழ்ந்திருந்த
பீடில்லை! உலகெங்கும்
மகிழ்ச்சியோடும் பெருமையொடும்
தமிழர் வாழ்ந்த
பாடில்லை! ஏனென்றால்
தமிழர்க்கோர் தனிஆட்சி
படைத்த சொந்த
நாடில்லை எனமுழங்கி
நின்றானை நாம்இந்நாள்
இழந்தோம் அம்மா!
உடல்மண்ணுக் குயிர் தமிழுக்
கென்றுரைத்தான்! இன உணர்வை
ஊட்டி வைத்தான்!
கடல்தாண்டி எரிந்த தமிழ்
ஈழத்தைக் கண்டு ‘தமிழ்
நாட்டார் கண்ணீர்
விடல் போதா தெழுந்தின்றே
போர்செய்வீர்! போர்செய்வீர்!
என விளித்தான்!
அடலேறாய் உயிர்வாழ்ந்தான்
எந்தலைவன் அவனை இனி
எங்கே காண்போம்?
வெட்டி அழகுற வைத்த
தாடியும் வேல் ஒளி விழியும்
உறுமி மேளம்
கொட்டியதோ என முழங்கும்
குரலொன்றும் குன்றொத்த
உயர் நெடுந்தோள்
தொட்டிருக்கும் எழில் நீலத்
துண்டும் கொண் டுலாவியவன்
தூங்கப் போனான்.
தட்டி எமை எழுப்பியவன்
தனி ஒதுங்கி விழிஉறங்கல்
தகுமோ சொல்வீர்?
பணத்தினிலே புரண்டவர்கள்
பணம் துய்த்தார்! படித்தவர்கள்
படிப்பே துய்த்தார்!
இனத்தை எவர் கவனித்தார்?
இவையிரண்டும் எந் தலைவன்
பெற்றிருந்தும்
மனத்தினிலே தமிழரின
உணர்வுடையோனாய் மண்ணில்
வாழந்தான் மாற்றார்
சினத்தினிடை களமாடி
இனம்காத்த கிழச்சிறுத்தை
விழிமூடிற்றே!