
ஏதேச்சையாய் பார்க்கும்
தேநீர்க் கடை நாளிதழ்
தட்டிவைத்த
வறட்டியிலும்
உணவுத் தேடும்
நகரத்துக் குருவி
நசுங்கிய
பாதி உடலோடும்
மீதி நம்பிக்கையோடும்
சாலையைக் கடக்கும்
அட்டைப் பூச்சி
பயன்பட்ட பாவத்திற்கு
குப்பைக்குப் போகும்
பிளாஸ்டிக் வகையறாக்கள்
அவசர சிகிச்சைக்காக
எல்லா வாகனங்களையும்
மீறிச் செல்லும்
ஆம்புலன்ஸ் வண்டி
சிக்னலுக்கு காத்திருக்கையில்
எந்த தடையுமின்றி
என் மீது மோதி உடையும்
ஒரு சிறுவன் ஊதிய
சோப்புக் குமிழி
பல மாதங்களுக்கு
ஒரு முறை
என்னை அழைக்கும்
பேளுக்குறிச்சி ஊராட்சி
‘உங்களை அன்புடன் வரவேற்கிறது’
என்னும் வாசகம்
சன்னல் வழி
கையசைக்க
அம்மாவின் கண்ணீரையும்
நிராகரித்துப் புறப்படும்
பேருந்து
இவைகளில் தான்
இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன
எனது
பலக் கவிதைகளும்
சிலக் கனவுகளும்...
- கதிர்மொழி