
மெல்லிய சதைகளை
உன் கூரிய
நகங்களால் பிறாண்டு.
மனிதாபிமானத்தைக்
காயப்படுத்தி
அந்த புண்ணிலிருந்து
விழியும் புழுக்களையும்
நீயே கொத்தி தின்னு.
சரணடைந்துவிட்ட
குற்றத்திற்காக
போர் தர்மத்தின்
மர்ம உறுப்புகளில்
மின்சாரம் பாய்ச்சு.
கண்களில் எண்ணெயை
விட்டுக் கொண்டு
எண்ணெய்க் காடுகளை
மட்டுமே
சுற்றிக்கொண்டிரு.
சிற்றாயுதங்களை
தேடுகிறோம் என்று சொல்லி
பேராயுதங்களை அனுப்பு.
எதிரியின் வாய்க்குள்
டார்ச்லைட் வெளிச்சம் பாய்ச்சி
எண்ணெய் வயல் தேடு.
நீதியை நிர்வாணப்படுத்தி
தலைகீழாய் தொங்கவிட்டு
அதன்மீது
நாய்களை ஏவு
எப்படி மறந்தாய் அமெரிக்க
வீரனே...?
ஒவ்வொரு ஆண்டின்
செப்டம்பர் மாதத்திற்கும்
11-ம் தேதி உண்டு என்பதை
இன்று சிறைச்சாலையில்
நீ வைத்த நெருப்பில்
பற்றி எரியத்
தொடங்கிவிட்டது
எண்ணெய் வயல்
பிஞ்சுகளின் நெஞ்சங்கள்.
உனது
வெள்ளை மாளிகையிலிருந்து
விடுக்கப்படும்
நீலிக்கண்ணீர்
செய்திகள் பற்றியெல்லாம்
எங்களுக்கு கவலையில்லை
உனது
வெள்ளை மாளிகையே
‘இல்லை’ மாளிகை
என்று செய்தி வராமல்
பார்த்துக்கொள்...!
யோசித்து கொல்!
- பூங்காற்று தனசேகர்