கீற்றில் தேட...



marriageஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
தானாக இறங்குகிறோம்..
அல்லது
தள்ளி விடப்படுகிறோம்..!

வாழ்க்கைத் துணையோடு
நீந்தத் தொடங்குகையில்தான்
பயணத்தின் பரிமாணம்
பயமுறுத்துகிறது..!

கவலைகளும் துன்பங்களும்
முதலைகளாய் வாய்பிளக்கும்

சோதனைகள் அவ்வபோது
சுழல்களாகி உள்ளிழுக்கும்..!

எதிர்பாரா சந்தோஷங்கள்
இளைப்பாற்றும் மணற்திட்டாய்..!

கூடவரும் துணையால்
குடைசலும் குதூகலமும்
அவரவர்க்கு அமைந்தபடி..

மூழ்கி எடுத்த முத்துக்கள்
முதுகில் சுமந்து தெப்பங்களாகும்..!

சிலநேரம்
சொத்துக்களுக்காக சுறாக்களாகும்..!!

சவாலாகவோ, சலித்துக் கொண்டோ
வெற்றிகரமாய்க் கடப்பவர்கள்
வெறும் சாமான்யர்களாம்..!

விடுவித்துக் கொண்டு - பாதியில்
முடியாமல் ஓடுவோர்
முற்றும் துறந்த ஞானிகளாம்..!!


- பனசை நடராஜன், சிங்கப்பூர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)