சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை
மண்ணால் உருவான
மாபெரும் சமுத்திரம்
சிறப்பு அனுமதியுடன் -ஒரு
சிறிய பயணம்
கப்பல் பட்டறைகளின் கற்பனை உலகம்
கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்
சாரக்கட்டுகளில் சறுக்கு விளையாட்டு
கோரம் நடக்கும் என குறி கூட தெரியாமல்
கொடிய வாயுக்களிடம்
குசலம் விசாரிப்பு
எல்லா வேலைகளும் இங்கு கிடக்கும்
எண்ணெய் தொட்டிகளும் இதில் அடக்கம்
வெல்டிங் வேலையும்
விவேக சிந்தனையும்
மின் தூக்கி இல்லா மிடுக்கான பயணம்
பாரந்தூக்கி மட்டுமே இப்போது
நம் பாரத்தை தாங்கி
எறும்புகளாய்
எம் உழைக்கும் வர்க்கம்
எண்ணிலடங்கா எண்ணெய் நிறுவனங்கள்
என்னைப் பிரமிக்க வைக்கும் எழில்
பூங்கா போன்ற காட்சி -அதற்கு
புகை மட்டுமே சாட்சி
ஓசோன் காக்கும் ஆசான் -அந்த
ஒரே நாடு சிங்கை
மாசு இல்லை இங்கு -மண்
தூசு இல்லை எங்கும்
பொருளாதாரப் பொழில் -அது
பொங்கிவரும் எழில்
விசாலமான சாலையில்
வாகனங்கள் மட்டும் காற்றுடன்
வெற்றிடத்தை மட்டும் பார்த்தேன்
வேறு யாரும் அங்கு இல்லை
தீயணைப்பு வண்டிகளின்
தியாக அணிவகுப்பு
அவசர நிலைக்கான
அயராத விழிப்பு நிலை
முதலுதவிக்கான
முன்னேற்பாடு
உழைக்கும் வர்க்கமே
உழலும் சொர்க்கமே
வந்தது நமக்கு வியர்வை -அது
தந்தது நமக்கு உயர்வை
குருதி வருமென்றாலும் -அது
இறுதி அல்லவே
உழைப்பு மட்டுமே உறுதி -நம்
உன்னத வாழ்க்கையைக் கருதி
- அத்திவெட்டி ஜோதிபாரதி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )