மனிதப் பிணம்!
ஈக்களும் எறும்புகளும்
அதனைச் சுற்றிலுமே!
சாலையில் சென்றிடும்
மனித யினமதைக்
கண்டும் காணாமல்
போகுது பார்!
சற்றே தூரத்திலோர்
காக்கைப் பிணம்!
அங்கே கூடிக்கரையிது
காக்கை இனம்!
பசுவதைக் கெதிராய்
ஓர் இயக்கம்!
தெரு நாயைக் காக்க
ஓர் இயக்கமென
பிராணிகளைக் காக்கப்
பல இயக்கம்!
மனிதனைக் காக்க
ஏனில்லை?
சாலையிலே ஓர்
விபத்தென்றால்
முதலுதவிக்கு மங்கு
நாதியில்லை!
தெருவிலே யொருவனுக்குக்
கத்திக் குத்து....
அடுத்த நொடியிலங்கு
எவருமில்லை!
துடிதுடித்துச் சாகும்
மனிதன் வாயில்
குவளை நீரூற்றுதற்கும்
எவருமில்லை!
ஆறறிவு பெற்ற
மனிதராம் நாம்!!
எங்கே தொலைத்தோம்- நம்
இதயத்தை?
- இமாம்.கவுஸ் மொய்தீன்