கவிதைகளை
குளிர் அறைகளில் அமர்ந்து
நிதானமாய்
எழுதுகிறேன்
என்
காதல் குறிப்பேடுகளில்
வெயில் சாமரம் வீசிய
கானல் காதலியின்
நினைவுகள் எழுகின்றன.
அவள்
ஸ்பரிசங்கள் அந்நியமாய் போன
கால இடைவெளிகளிலும்
மிதந்து வருகின்றன
கடந்த காலம் கவர்ந்து நடந்த
கைவிரல்கள்.
இன்னும்
காதலின் ஈரம் காயாமல்
அவள்
முத்தங்களின் முந்தானைகளை
முகர்ந்து சுகிக்கிறதென்
நாசி.
குளிர் குறித்த
கவிதைகளை
வெயில் அறைகளில் தான்
எழுத முடியும்
போலிருக்கிறது.
- சேவியர்