
அங்கங்கே கிளிசல்களுடன்
மொட்டை மாடியில்
புரண்டு படுக்கும்போது
அரைத்தூக்கத்தில்
நான் பார்த்து சிரிக்கும்
அந்தரங்க சிநேகிதி
இருண்மையை அவிழ்த்த வண்ணம்
பார்த்துக் கொண்டிருக்க
குறட்டை சப்தம் அதிகரிக்கிறது
இழுத்து போர்த்திக்கொள்கிறேன்
பிரபஞ்சம் முழுமைக்கும் தொடர்கிறது
2.
இசிதாவை சந்தித்த பின்தான்
என் இதயம் துடிக்க ஆரம்பித்தது
மனித மொழிபேசியே
என்னுள் புதைந்துவிட்டவள்
அவளுடைய உலகினுள்
அவ்வவ்போது
விருந்தினராய் என்னையும்
அழைத்துச் செல்வாள்
வியக்கதகு உலகம் அது
எல்லோரும் சமமாய்
அன்பின் முகமாய்
ஆர்பரிக்கும் அலையை ஞாபகபடுத்தி
இழுத்துக் கொண்டு ஓடுகிறாள்
சிங்கத்துடன் சிநேகம்
சாமி மேல் சவாரி என்று
எப்போதும் சப்தத்துடன்
எப்போதாவது மௌனமாய்
கன்னத்தில் கை தாங்கி
காத்திருக்கிறாள்
அவளின் உலகினுள்
அடுத்து யாரையாவது கடத்திச்செல்ல
இசிதா
எனக்கான ஆச்சர்யங்களை
என் உதட்டு புன்னகை தாங்கியுள்ளது
தேவதைகளின் அரசியே
இசிதா
காத்திருக்கிறேன்
உன் புன்னகைக்கு
மீண்டும் உன் உலகினுள்
கடத்திச் செல்ல வருவாயா?
- பாண்டித்துரை