Ladyபக்கத்தில் இருக்கும் நொடியில்
பார்வதி; பாசத் தோடு
கக்கத்தில் சுமக்கும் பொழுது
காபந்து செய்யும் அன்னை
முக்கத்தில் சிரித்துப் போகும்
முப்பாலின் குடுவை; ஆசை
செக்கிற்குள் என்னை ஆட்டும்
செண்பகப் பூவின் தங்கை

கடவாயில் என்னை மெல்லும்
காயகல்பம்; இதழ்கள் எழுதும்
தொடர்கதை; சுருங்கச் சொன்னால்
தொகுக்காத மர்ம நாவல்
வடலூரும் காணா ஜோதி
வகுப்பறையில் வழியும் தூக்கம்
அடங்காத பருவக் காய்ச்சல்
ஆடாத இளமைத் தொட்டில்

நூல்களே பயிலும் நூற்பா
நுணாமர நிழலின் ஜோடி
கால்கொண்ட புடவைத் தோப்பு
கம்பனே அறியா சீதை
வேல்விழி விருந்துக் கூடம்
வேட்டைக்கு தகுந்த விரதம்
பால்நெடி அடிக்கும் மேனி
பசித்தவன் விரிக்கும் மெத்தை

காமனின் காமா லைக்கு
கண்டெடுத்த கீழா நெல்லி
தாமரை குளத்துக் குள்ளே
தண்ணீரின் சிணுங்கல் நடனம்
பாமர உதட்டுக் கேற்ற
பழகுதமிழ் பாட திட்டம்
ஆமென யாரும் ஏற்கும்
ஐயிரு மாதத் தீர்ப்பு

வாயிலில் நடக்கும் கோலம்
வாலிபப் பறையின் ஓசை
தேயிலை பருகும் பானம்
தெம்மாங்கு பாட்டின் தாளம்
பாயிலே படுக்கும் தோகை
பத்தினி சமைத்த சோறு
சாயலில் மங்கள வைபவம்
சந்திரனின் சயன விடுதி

இரவுகளின் தைல வாடை
இலக்கியத்தின் சாந்தி மூகூர்த்தம்
கரவொலியின் கனத்த மௌனம்
காசியிலும் கிடைக்கா தீர்த்தம்
நிரந்தர ரட்ச்சகி; காண
நெட்டையாய் வளர்ந்த முல்லை
ஜரிகையில் நெய்த வெண்பா
ஜனங்களின் வேடந் தாங்கல்

புலன்களின் புதையல்; காதல்
புலவர்களின் வர்ண மெட்டு
கலப்பில்லா ஒட்டு மாங்காய்
காவிரியின் நுரைத்த போக்கு
அலுப்பில்லா அரசு வேலை
அடிமைகளின் கோபக் கங்கு
கொலுவைக்க முடியா பொம்மை
குழந்தையில் கிடைத்த ஞானம்

பரம்பொருளின் பயணச் சீட்டு
படைத்தவனே கிறங்கும் கவிதை
சிரம்தாழ்த்த நேரும் சேதி
சித்தன்ன வாசல் கூரை
வரப்போகும் திருநாள் வாழ்த்து
வழக்கொழிந்த சமயச் சடங்கு
நிரம்பாத நினைவுக் கேணி
நெருப்பின்றி கசியும் ஒளி நீ


யுகபாரதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It