அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!
ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!
எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!
உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!
உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!
ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்!
நீளும் கரிய இரவில்
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!
இருளோடு பேசும்
மின்மினிகள் போல்!
உனது கிளைகளில்
எப்போதும்
இசைச் சொல்லித் திரியும்
குயில் நான்!
உன் அலங்கார அறையை
முன் அநுமதியின்றி எட்டிப்பார்த்தேன்;
ஒரு காதில் சூரியனையும்
மறு காதில் சந்திரனையும்
அணிந்து அழகுப் பார்த்திருந்தாய் நீ!
காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!
வலையோடு காத்திருக்கிறேன்
விண்மீனான உனைப்
பிடித்துவிடும் ஆசையோடு!
- ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )