இதையறியா திருக்கின்றோம் மண்ணில் நாமும்!
செயற்கையைச் சொந்தமென ஆக்கிக் கொண்டு
செம்மாந்த வாழ்வென்று பிதற்று கின்றோம்!
வயற்காட்டு உணவுகளின் சுவையை விட்டு
வாசனையின் கலவைக்கு முதன்மை தந்தோம்!
முயற்கூட்டில் வாழ்கின்ற முயலாய் நாமும்
முகவரியைத் தொலைத்துவிட்டோம்! செயற்கை யாலே!
உயிரினது தோற்றத்தில் நகலெ டுத்து
உண்மையை வெற்றிகொண்டோம் போலி யாலே!
பயிரினது வளர்ச்சிதனில் இயற்கை விட்டோம்!
பரந்ததொரு பெருமரத்தைப் “போன்சாய்” ஆக்கி!
துயிலெழுப்பும் சேவலோசை ஒலியை இன்றோ
துணைநிற்கும் தொலைபேசி அழைப்பாய் வைத்தோம்!
வயிறெழுப்பும் பசிபோக்க மாத்திரை கண்டு
வாழ்க்கையின் நீளத்தைச் சுருக்கிக் கொண்டோம்!
பலநிலையில் நம்வாழ்க்கை உயர்ந்து செல்ல
படிப்படியாய் இயற்கையின் இனிமை விட்டோம்!
சிலநிலையில் செயற்கையைக் கைப்பி டித்தால்
சிறப்புகளில் வையகமும் செழித்து நிற்கும்!
நலங்கெடுக்கும் செயற்கையை விலக்கி வைத்து
நலமளிக்கும் இயற்கையோடு உறவு கொள்வோம்!
வளமளிக்கும் வாழ்க்கைக்கு இயற்கை தேவை!
வசந்தங்கள் பூக்கட்டும் இனிதாய் வாழ!
- ரா விமலன்