ஏ.. பி.. சி.. டி.. படித்தாள்!
உங்கட மகள்
அ னா, ஆ வன்னா கற்றாள்!
என் மகள்
மழைத் தண்ணீரில்
காகிதப் படகுவிட்டு மகிழ்ந்தாள்!
உங்கட மகள்
கடல் தண்ணீரில்
அகதிப்படகுக்காகத் தவித்தாள்!
என் மகள்
திரை நாயகர்களின்
சண்டைக் காட்சிகளை ரசித்தாள்!
உங்கட மகள்
வரலாற்று நாயகர்கள் வழியில்
சண்டையிடத் துடித்தாள்!
என் மகளுடைய
அம்மாவின் கற்பு
போற்றப்பட்டது!
உங்கட மகளின்
அம்மாவின் கற்பு
சூறையாடப்பட்டது!
என் மகளுடைய
அப்பாவின் உயிருக்கு
ஆயுள்காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது!
உங்கட மகளுடைய
அப்பாவின் உயிர்
அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது!
என் மகள்
பூஞ்சோலையில்
ஓடியாடிச் சிரிக்கிறாள்!
உங்கட மகள்
செஞ்சோலையில்
உயிர் பிரிந்து கிடக்கிறாள்!
என் மகளின்
பிறந்தநாள் கேக்கில்
மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்!
உங்கட மகளின்
நினைவு நாள் அஞ்சலிக்காக
மெழுகுவர்த்தி ஏற்றுகிறீர்கள்!
என் மகளுக்காக
ஏற்றிய மெழுகுவர்த்தி
மின் வெளிச்ச வெள்ளத்தில்
கவனிப்பாரின்றிச் சிரிக்கும்!
உங்கட மகளுக்காகக்
கண்ணீர் உதிர்க்கும்
மெழுகுவர்த்தி வெளிச்சம்
பேரிருளை எரிக்கும்..!
- கோவி. லெனின்