வணக்கப் பரிமாறல்களில்
அழைத்தாயா? என்று
கேட்போம் அழைத்து
நினைத்தாயா? என்று
கேட்க நினைவிருப்பதில்லை
பார்ப்போமா? என்று
கேட்க பயமாயிருக்கிறது
கோபமா? என்று
கேட்கிறோம் குலைந்தபடி
சாப்பிட்டாயா? என்று
கேட்கவே பசிக்கிறது
பத்திரம்டா! என்று
சொல்லத் தவறுவதில்லை
மன்னித்திடு! என்று
கூற மறப்பதில்லை
நன்றி! என்று
சொல்லாமல் முடிவதில்லை
புள்ளிகளால்
நிறைகிறது கோடு
அந்தியில்
சிவக்கிறது வானம்.
- மதியழகன் சுப்பையா, மும்பை