
கூடுதல் சுதந்திரமுடையதான பாவனை பூசி
வெறும் சந்தையாகத்தான் எப்போதுமிருக்கிறது உலகம்
வலிந்து நீ சூட்டிய மகுடங்கள் உதிர்த்து
நிறுத்தல் முகத்தல் மானிகள் தரித்து
யாவற்றுக்கும் தரகுமண்டியாகிவிட்ட உலகம்
சரக்கு பாரத்தோடு
எடைமேடையில் நிற்குமொரு லாரி போன்றுமிருக்கிறது
எல்லோரும் புசித்தது போக
எஞ்சிய ஒருதுண்டு வேட்டைக்கறி அல்லது நீர்க்கிழங்கிலிருந்து
ரூபமற்று கிளைத்த பரிவர்த்தனை விதிகளின் எந்த ஷரத்திலும்
பண்டமென்பதன்றி வேறு கியாதியில்லை உனக்கு
சுரோணிதம் திரண்டுச் சூலுறும்போதே
சிறைக்கம்பிகளையொத்த International Bar Code ல்
உயிரின்மீது விலைப்பட்டியல் அச்சிடுவதை
வேடிக்கைப் பார்க்கத்தான் தடை; மற்றபடி
பருத்தத்தொடையும் சிறுத்த இடையும் கொண்ட
காதல் ததும்பும் / உலர்ந்த இருதயத்தை
தாய்மை சுரந்து கசியும் ஸ்தனங்களை
வாழ்வின் மர்மங்களை ரகசியமாய் அவிழ்த்துப் பிணைக்கும் இலக்கியத்தை
யாருக்கும் அஞ்சா வீரத்தை
தேவையெனில்
உன்னையே நீ
விற்கலாம் வாங்கலாம்
வாங்கி விற்கலாம்
விற்றும் வாங்கலாம்
ஆனாலும்
விற்பனையாளன் அல்லது நுகர்வோன்
கெட்டிக்காரத் திருடன்
அல்லது
களவு கொடுக்கும் இளிச்சவாயன்
- இவர்களில் யாராயிருப்பதென்று முடிவெடுக்கும் சுதந்திரத்தை
எதற்காகவும் இழக்காதவனென்று கதைத்துத் திரி.
- ஆதவன் தீட்சண்யா (