Summerமுதிர்ந்த வெயிலால் நிரம்பியுள்ளன
யாருமற்ற வீதிகளின் பள்ளங்கள்
கானல்நீரைக் கவிழ்த்தபடி
நீண்டுகிடக்கிறது நெடுஞ்சாலை
உடல் முழுவதும் கைகளையேந்தி
தாகம் தணிக்கச் சொல்லுகிறது
நெளிந்தோடும் நதி
வறட்சியால் ஒடிந்து விழுந்த
மலைகளின் நிழல்களிலெல்லாம்
அனல் எரிந்த புகை
கொண்டாட்டத்துடன் மலர்களை உதிர்த்த
செம்மரங்கள்
கழன்றுவிழும் இலைகளைக்
காணச்சகியாமல் தேம்பியழுகின்றன
பறவைகளின் சிறகசைப்புகளை
எங்கேயும் கேட்கமுடியவில்லை
தொங்கிய முகத்துடன் அலையும்
மனிதர்கள் யாரும்
யாருடனும் பேசிக்கொள்வதில்லை
மண்புழுக்கள் கருமுட்டைகளை
எங்கு இடும்
இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது
எப்படித் தேர்ந்தெடுத்தாய்
இந்தக் கோடைகாலத்தை
என் காதலை நிராகரிக்க.


சுகிர்தராணி
Pin It