
கவிதை ஒன்று வேண்டும் - நான்
செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு
சின்ன கவிதை வேண்டும்!
சோலை ஒன்று வேண்டும் - அங்கு
தூய தென்றல் வேண்டும் - இளங்
காலை தோறும் தமிழ்ப் பண் முழங்கி எனைக்
கருணை செய்ய வேண்டும்!
இசை ஒலிக்க வேண்டும் - தமிழ்
எனை மயக்க வேண்டும் - புது
விசைபடர்ந்ததென அழகு தமிழ் வரிகள்
வெறி கொடுக்க வேண்டும்!
பாட்டுச் சொல்ல வேண்டும் - இசை
பாய்ந்து செல்ல வேண்டும் - அதைக்
கேட்ட படியெனது கருவில் வளர்மழலை
கிறக்கம் கொள்ள வேண்டும்!
நாத மணிகள் வேண்டும் - அவை
நான்கு புறமும் வேண்டும் - தமிழ்
வேத கிண்கிணி முழங்க, என் வயிற்று
வேங்கை துயில வேண்டும்!
வாத்தியங்கள் வேண்டும் - கவி
வாக்கியங்கள் வேண்டும் - அதில்
ஏத்திவைத்த தமிழ் மெட்டில் எனது சிசு
இசை படிக்க வேண்டும்!
வீணை காண வேண்டும் - அதை
விழுந்து தழுவ வேண்டும் - இசை
ஆணை இடும் தேவி எனது சேய் மகிழ
ஆசி அருள வேண்டும்!
அமுதம் ஊட்ட வேண்டும் - தமிழ்
அமுதும் ஊட்ட வேண்டும் - இனி
எமது மடிதவழும் மழலை கேட்கவொரு
இனிய கவிதை வேண்டும்!
- தொ.சூசைமிக்கேல் (