
பழகும் வரை
இழுத்து வந்தவை
கிறுக்கல்கள்
வளைத்து நெளித்து
புள்ளி வைத்து
போடும் போது
கோலங்கள்
அறியப்படும்
கணிதத்தில்
ஆரமென்றும்
விட்டமென்றும்
எழுதியது
தவறென்று
இழுக்கும் போது
அடித்தல்கள்
முதுமை வந்து
முகத்தில்
எழுதும் போது
சுருக்கங்கள்
வாங்கிய
அடிகளின்
ஞாபக நீட்சியாய்
தழும்புகள்
கோடுகள்
எப்போதும்
அறியப்படுவதில்லை
கோடுகளாக மட்டும்
- க.ஆனந்த்