
மரத்தடி மரத்தடியாயும்...
குழிகள் குழிகளாயும்.....
ஒளித்துயிர் பிடித்தேன்.
கனவுகளைக் கூட மிச்சம்
வைக்காமல்
கண்கள் பஞ்சாகின.
கால்கள் நடைதளர்ந்தன.
கைகள் முறிந்து கிடந்தன.
நா உலர்கிறது.
வயிறு உள்ளிளுத்தது.
உயிர் ஊசலாடும் இந்தத்
தருணத்திலும் நீ
கேட்கிறாய் உனக்குத் தீனி!!!
இரத்தமாய்ச் சிவந்து
முள்ளும், கல்லும்
கீறிக்கிளித்தும்
மூடிக்காத்த
முலைகளைக் கேட்கிறாய்!!
மக்களில் இரக்கவாளி,
மாதா என்பதால்
உன்னுள் என்னைச்
செரித்துவிடத் துடிக்கிறாய்.
மதங்களைக் கடந்தும்,
மொழிகளைக் கடந்தும்
தாய்மை என்கிற
தூய்மையிலெல்லாம்
நம்பிக்கையற்ற
பேய்களின் தலைகளே!
இன்னும் ஏன் நிற்கிறாய்?
வயிற்றில் இருக்கும் - என்
சேயினைக் கீறு
யோனி விரியலில்
எல்லாம் முடிந்தபின்
வெடிவைத்து மகிழ்
மேலும்......
உன் தாகமடக்க
என்தோலை உரி!
உலகம் பாராமுகமாய்விட்ட
என்னைச்
செருப்புகளாக்கி உன்
காலில் போட்டு மிதி !!
- தமிழ்சித்தன்