குந்துகிறது துரத்தப்படுகிற கூரையின் துண்டு.
களப்புவெளி விரிய இடையில்
சிக்குண்டு விடுகிற

ஒளிந்திருக்கும் குழந்தைகளை
தேடுகின்றன எறிகனைகள்.
ஒற்றை புளியமரத்துடன்
மாத்தளன் வெளித்துக்கிடக்கிறது.
விமானங்கள் குவிந்து எறிகிற குண்டுகள்
விழப்போகிற
அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில்
நிறைகிற சுடு மணலில்
இப்போதிருக்கிற
குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைகின்றன.
ஒரு சில பனைகளுக்கிடையில்
படருகிறது மணலின் வெம்மை.
உவர்க்களியில் கொதிக்கிற ஈரலிப்பில்
எழுத முடியாத சொற்கள் புதைகின்றன.
உப்புவெளியில் பாதிச்சூரியன்
சுருண்டு விழ அனல் காற்றில் பறந்துபோகிறது
இல்லாத குழந்தைகளது
அகற்றிக்கொண்டு வரப்படுகிற சட்டைகள்.
கிணியாத்தடிகளில்
கட்டப்பட்டிருக்கிற கயிறுகளுக்கிடையில்
தொங்குகிறது
நேரம் குறித்திருக்கிற கொடு நெருப்பின்
கடைசித்துளி.
உடல்வேலன் முள்ளுகளுக்குள் வந்து
மிரட்டுகிற இரவில்
பாதிநகரங்களின் நிழல் விழகிறதென
கைவிடப்பட்ட குழந்தைகள் அழுதனர்.
மண் துடித்து கடல்மேல் எழுகிறது.
முன்பொரு வலயத்தில் சிதறுண்டுவர்களின்
பெயர்களை
யாருமற்ற சிறுவன் சுடு மணலில் எழுத
கள்ளிச்செடிகளின் நிழலில் கிடக்கிறது
மிஞ்சியிருக்கிற ஒற்றைப்பொதி.
நறுவிலி உவர்நிலக்காடுகளில் அலைகிற
பெருங்குரல்களை தள்ளுண்டுபோகிற
கடல் மட்டும் கேட்டுத் துடிக்கிறது.
ஒற்றைத் தென்னை மரத்துடன்
வட்டுவால் வெளித்துக் கிடக்கிறது.
தொடுவாய்ப்பிரிப்பில் காய்ந்த கோப்பையில்
மிதக்கிறது இனத்தின் பெருங்கனவு.
ஒரு பெருமிருகம்
முள்ளிவாய்க்காலை குடிக்க
திட்டுமிடுகிற குருட்டிரவில்
அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக
பற்கள் விழ பெரும்பாம்பு பறக்கிறது.
மணல் சுடாகி கொதிக்கிற கரையில்
பொட்டென மிதக்கிறது கடல்.
------------------------------------------------------------------------
12.02.2009, புதிய பாதுகாப்புவலயம் அறிவிப்பு - வட்வால், மாத்தளன் இடையில்.
- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )