துப்பாக்கிகளின் மீது நம்பிக்கையில்லாத உன்னை
யுத்தத்திற்கு இழுத்துச் சென்றார்கள்
உன் கழுத்தில் தொங்கிய சிலுவையை அறுத்தெறிந்துவிட்டு
சயனைட் குப்பியைத் தொங்கவிட்டனர்
உன்னை அவசர அவசரமாக வீரனாக்கியபடி
அவர்கள் கோழைகளாகிக் கொண்டிருந்தனர்
உன் மனைவியின் முகத்தில்
சூரியன் குருதிச் சகதியில் மூழ்கிக்கிடந்தது
நம்பிக்கை தரும் எந்தச் சொற்களையும்
கடைசியிரவில் நீ அவளுடன் பரிமாறியிருக்கவில்லை
அதற்குள்
உன்னை இழுத்துச் சென்றுவிட்டனர்
யுத்தத்தின் தீவிரம் துரத்தத் துரத்த
அவர்கள் வீரர்களைத் தயாரித்துக்கொண்டேயிருந்தார்கள்
சவப்பொட்டிகளும்
புதைக்குமிடாங்களும் அருகிப்போயின
போரின் அதிர்வுகளால் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருந்த
நாட்களின் ஒரு பொழுதில்
பொலித்தின் உறையால் முடிச்சிடப்பட்ட
உன் பிணத்தை
உன் மனைவியிடம் ஒப்படைத்தார்கள்
இறுதிப் பாடல் இசைக்கப்படாமலும்
மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படாமலும்
உன்னைப் புதைத்த மண்மேட்டிலிருந்து
கதறியழுதபடியிருந்த அவளின் மடியில்
கண்ணீரில் நனைந்துகொண்டிருந்தது குழந்தை
சிதைவுண்டுபோன வாழ்வின்
மீளவியலாத் துயரம் படிந்த நிலத்தில்
குழந்தைகளையும் வீரர்களாக்கிக் கொன்ற பின்
மகாவீரர்கள்
துப்பாக்கிகளை கடற்கரை மணலில் எறிந்துவிட்டு
சரணடைந்தனர்
உனது மரணமோ
அவர்களின் கோழை முகத்தின் மேல்
காறியுமிழ்ந்தபடியிருக்கிறது
- சித்தாந்தன் (