nightபல இரவுகள் மதுக்கோப்பைகளுடனும்
கூத்துகளுடனும் கழிந்துவிடுகின்றன
வெளிர்ந்து வெறுமையுடன் உடைந்து தொங்கும்
சில இரவுகள், ஈரத்தினால் தலையணை
உறக்கம் களைகின்றன.
அவள் அரவணைப்பின் சுகம் தேடும்
இரவுகள் காதலெனும் போலி
போர்வைக்குள் உறங்கிப்போகின்றன
தூரத்தில் தெரியும் தேவன் கோவில்
சிவப்பு சிலுவை மட்டும் தின்றுவிடுகின்றது
சில கருமைகளை பெயர்தெரியாத தூரத்து
தேசத்தில் நான் மட்டும் தனியாக,
இன்னது என்று கூறமுடியாத
விலங்கு துரத்துகின்றது
ஓடுகின்றேன் ஓடுகின்றேன்
எல்லைகள் முடிவின்றி நீள்கின்றன
மரணம் கதைப்பேசி போகின்றது என்னுள்
தட்டி எழுப்புகின்றாள் என்னவள்
விடிந்துவிடுகின்றன ஒருசில இரவுகள்
வேலை களைப்பும், துயரும் சூழ்ந்து
சில சாமங்களை ஏதுமற்ற தூக்கத்தில் தள்ளிவிடுகின்றன
என் பாட்டன் கூறும் ராசா ராணி கதைகளின்றி
பீடிநாற்றமும்,வேர்வையும் கலந்த
அவரின் பாசமிகு அரவணைப்புகளின்றி...
விடியலுடன் சேர்ந்து வரும் பெற்றவளின் வசைவுகள்
கேட்காமல் நரக இருட்டில் கழிகின்ற
இருள், என்பிணத்துடன் சயனித்து
ஆதி தேடி விடியும் இரவுகள்

இளவேனில்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It