கீற்றில் தேட...


Lover
எதிர்பாராத கணப்பொழுதொன்றில்
கன்னங்களிலோ, பற்றியிருக்கும் எனது விரல்களிலோ
மென்மையாக முத்தம் வைத்து ஓடுகிறாய்
பேரின்ப அதிர்ச்சியில் சிலையாகி நிற்கிறேன்
நீ பேசுவதைக் கேட்கும் பேராசையில்
பேச்சில் மௌனம் பிடிக்காத என்னை
பல கணங்கள் பேச்சிழக்க வைத்திருக்கிறாய்
ஒவ்வொரு சொற்களின் முடிவிலும்
புன்னகைக்கும் உன் வழக்கத்தில்
சிக்கிச் சீரழிகிறது என் மனது

எப்பொழுதும் என்னிமைகளிலேயே நின்றபடியிருக்கிறாய்
நான் சிமிட்டுகையில் என் விழிகளுக்குள் விழுந்து
காண்பவையெல்லாம் நீயாக
காட்சிப்பிழையாக்குகிறாய்
உனையேயுரைக்கும் மனசொலியிங்கு
அடுத்தவர்க்குக் கேட்டுவிடுமென்ற அச்சத்திலேயே
நிகழ்காலத்தில் என்னுரையாடல்களெல்லாம்
நிகழ்ந்தபடியிருக்கையில் அங்கு எப்படியிருக்கிறாய்