எந்த இன்றும்

இருந்ததில்லை
எந்தவொரு
நேற்றைப் போலவும்.
எந்த நாளையும்
இருக்கப்போவதில்லை
எந்தவொரு
இன்றைப் போலவும்.
எந்தவொரு
இன்றிலும்
இருந்ததில்லை
ஓன்றைப்போல்
இன்னொரு நிகழ்வு.
என்றாலும்
இல்லாமல் இருப்பதில்லை
எதைப்போலவோ
எதுவோ இல்லையென்ற
எப்போதுமான கவலைகள்.
என்ன செய்வாய்?
முகத்தை
மூடிக் கொண்டாய்
கசியும் வெட்கத்தை
என்ன செய்வாய்?
இதழ்களை
மூடிக் கொண்டாய்
பேசும் மௌனத்தை
என்ன செய்வாய்?
கண்களை
மூடிக் கொண்டாய்
துடிக்கும் இமைகளை
என்ன செய்வாய்?
காதுகளை
மூடிக் கொண்டாய்
உயிரின் ஓசையை
என்ன செய்வாய்?
காதலை
மூடிக் கொண்டாய்
கொல்லும் கனவுகளை
என்ன செய்வாய்?
மறைக்கத் தொடங்கிய
பின்
முன்னை விட
அழகாக
தெரியும்
உன் அழகை
என்னதான் செய்வாய்?