கீற்றில் தேட...

விண்ணிலிருந்து
இறங்கி கோதுமை நிற பாதங்களால்
வீதியெங்கும் ஓடி ஆடும் தேவதையாக...

கருமை நிற
இருளை முத்தமிடும் மின்மினிகளின்
பின்னால் ஓடுகின்ற சிறுமியாக...

ஊரறிய சரடுகட்டிய துணைவன்
பரிசளித்த முத்தங்களின்
ஈரத்தை வருடுகின்ற மனைவியாக...

கிழிந்து தொங்கும்
ஆடைகள் பற்றிய கவனிப்புகளின்றி
ஒவ்வொரு பேருந்தின்
சன்னலுக்கும் தட்டை உயர்த்திப் பிடிக்கும்
அவளின்
உறக்கத்தில் இவர்களையொத்த
ஆயிரம் கனவுகள் குறும்புன்னகையாய்
மலர்கிறது.