கீற்றில் தேட...

சடுதியாக என்
முகம் மோதிப்போகும்
எவருக்குமே
எனக்குள் உறைந்து கிடக்கும்
வலிகளின் ஆணிவேர் தெரியப்போவதில்லை

நசுங்கிப்போன
எதிர்காலம் மீதான கனவுகளை
பசியடங்கிய பின்னும்
தின்று தீர்த்ததே வாழ்க்கை?

வினாடி தோறம்
சிலுவையில் அறையப்படும்
என் உயிரில்
எரிமலைப்பிழம்புகளின் மாநாடு

உங்கள் ஒரு சொட்டுக்கருணைக்காக
என் மனச்சிதைவுகளின்
காட்சிப்படிமங்களை
விளம்பரம் செய்வது
அர்த்தமற்ற ஆலிங்கனம்

எரிந்து
சிதைந்து
வெந்து
கருகி
துகள் துகளாய்
தூர்ந்து போனதே
எனது சுயம்

விழுங்கப்படும் உரிமைகளும்
சுதந்திரத்தின் மீதான
ஆதிக்க அழுத்தங்களும்
எனக்குள் வெறியேற்றும்
பிரயளத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
விதைத்தக் கொண்டிருக்கிறது

விரைவில் வெகுண்டெழப்போகும்
எனது ஆழ்கடல் ஏகாந்தம்
மனம் தின்னும் வலிகளைப்போலவே
யாராலும்
அடையாளம் காண முடியாதவை

நிறமற்ற கனவுகள்
மிக மிகப்பயங்கரங்களை
வலிகளின் புதைமணலில்
திணித்துக்கொண்டிருப்பது
முற்றுப்புள்ளியின் பக்கத்தில்தான்

விரைவில்
ஒட்டுமொத்த வலிகளைத்திரட்டி
உங்கள் மீது
எறிகணையாய் எறியப்போகிறேன்

பின்
மெல்ல மெல்ல நீங்களும்
உணரத்தொடங்குவீர்கள்
எனக்கே எனக்கான
வலிகளின் உள்ளார்ந்தங்களை

அப்போது
வலிகளற்ற வானவெளியில்
எனது சிறகுகளுக்கு
களைப்பேயிராது....!