கீற்றில் தேட...

முடிந்து போகும்

தேவதைக் கனவுகள்

வைகறையை வழிமறித்து

இரந்து நிற்கின்றன

தொடர்ந்து நகரும்

காலச்சக்கர வியூகச் சுழற்சியின்

சுடர்ப்பிரகாசம் வியாபித்து

போய்க்கொண்டேயிருக்கிறது

ஞாயிறின் புரவிக்குளம்புகள்

அலட்சியப் ப்ரியம் வழிய

அவசரமாய்த்

தன் வழக்கமான பாதையில்


2.

எப்போதும்

சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே

கிடப்பதேன் விடுதலைகள்?

தொடக்கங்களின் முடிவும்

முடிவுகளின் தொடக்கங்களுமே

தேடல்களின் கருப்பையாகின்றனவா?

புதிய மொழி புதிய தேடல்

புதிய காலம் புதிய பிரபஞ்சம்

என பழையதனைத்தையும்

புதுப்பிக்கும் ஆற்றலுள்ள வஸ்து எது?

தீட்சண்ய பேரெழுச்சிக்கான

கந்தகம் பொதித்த

எனது அக்கினிக்குஞ்சு

எந்த வனத்திலிருக்கிறது?

ஆதியின் வேர்களற்று

அந்தமற்ற சுயம்புவாதல் எப்போது?

3.

கரைகளற்ற அலைகள்

இருளில் எழும்பியாட

பிரளயமொன்றில் கரையும் உலகம்

பிரபஞ்சத்துளியா சமுத்திரம்?

4.

இன்று என் ருதுவனத்தில்

முளைத்தபடியிருக்கின்றன

புதிய விருட்சங்கள்

மகா காத்திரமான முடிசொன்று

அவிழத்தொடங்கியிருக்கும்

இந்த பிரம்மமுகூர்த்தக் கணம்

எல்லாத்தடைகளையும் உடைக்கும்

உத்வேகம்.