நீண்ட காலத்திற்குப் பின்
இருள் பூசிக்கிடந்த
அந்த அமாவாசை நாளில்
நகர்வலம் புறப்பட்டான்
பராக்கிரம பாண்டியன்.
மந்திரி பிரதானி உடன்வர
எட்டுப்போட ஆரம்பித்தன
இரண்டு குதிரைகள்.
வீதியெங்கும் ஏற்றப்பட்டிருந்த
தீப்பந்தங்களின் ஒளி
கோயில் தீபாராதனை அகலைப்போல
மஞ்சள் பூசிக்கிடந்தது தெருவில்.
மந்திரி பிரதானி
மாறவர்ம கேசரியிடம்
ஊர் விஷயங்கள் குறித்து
உரத்தே கேட்டுக்கொண்டு வந்தான்
பராக்கிரமன்.
வீடுகளுக்குள் விளக்கில்லை
வீதிகளில் மட்டும் வெளிச்சம்
எதற்கு மந்திரியென
புரியாதது போல
புதிர்போட ஆரம்பித்தான்.
வேட்டை முடிந்து வரும்
உங்கள் புத்திரசிகமாணிகளின்
பராக்கிரமங்களைப் பார்அறிய
எழுதப்பட்ட வாசகங்களை
இருளில் தள்ளமுடியுமா
அது ஏற்ற செயலாகுமா
என பதறினான் கேசரி.
அமாவாசையன்று தான்
நம்நாடு இப்படியிருக்குமா
இல்லையெனில்
எப்போதும்
இப்படிதான் இருக்குமா
விடாது கேட்டான் பராக்கிரமன்.
புலவர் பெருமக்களின்
புகழுரையில்
இருட்டு குறித்து உங்களுக்கு
எதுவுமே தெரியவில்லை.
இருள் என்பது
குறைந்த ஒளியென
பிரஜைகளிடம் போதிக்க
மரத்தடி பள்ளிகள்
ஏற்கனவே துவங்கிவிட்டன.
ஐயம் தெளிவுற கற்ற மக்கள்
தற்போது பொழுது போக்க
விட்டில் பிடித்து விளையாடுவதால்
இருட்டு குறித்து அவர்கள்
எதுவும் நினைப்பதில்லை என்றான் கேசரி.
வீரம் விளைந்த மண்ணில்
விட்டில் பூச்சிகளுக்கென்ன வேலை?
பொங்கி வந்த கோபத்தால்
உடைவாளை உருவ நினைத்து
தவறவிட்டான் மாமன்னன்.
கமுகும், வாழையும்
நெல்லும் நிமிர்ந்து நிற்கும்
பசுமை வயல்களில்
அழகுமிகு அடுக்குமாடி வீடுகள்
அங்காடிகள் பலவென கட்டி விற்றபின்
விளை நிலங்களைத்தேடி
விட்டில்கள் வருவது புதிதல்லவே மன்னா
என சமாதானம் கோரினான் அமைச்சன்.
குடும்பத்தில் பெரும் குழப்பம்
இருப்பது உனக்குத் தெரியும்.
மல்லுக்கட்டை நீக்க
மார்க்கம் ஒன்று சொல்லு
பாவமாய் கேட்டான் மன்னன்.
ஆட்சியே குடும்பமானபின்
அச்சமெதற்கு மன்னா. . .
பாளையங்களைப் பிரித்து விட்டால்
பாதகம் நிகழாது என
தாங்கள் அறியா தந்திரமா மகாபிரபு
என மண்டியிட்டான் கேசரி.
கனத்துக்கிடந்த இதயம்
இலவம்பஞ்சாய் ஆனது.
இன்று உறக்கம்
நெடுநேரம் நீடிக்கும்.
முடிப்போம் நகர்வலமென
கோட்டையை நோக்கி
குதிரையைத் திருப்பினான்
பராக்கிரம பாண்டியன்.
பாவமாய் பார்த்தபடி
உடன் செல்கிறான்
மாறவர்ம கேசரி.
- ப.கவிதா குமார் (