empty tea cupமென்று தின்பதைப் பார்த்து
மனதைத் தொலைத்தான்
பல் செட்டைத் தொலைத்தவன்
----
மனைவியின் கோபம்
பேசத் தொடங்கின...
பாத்திரங்கள்
----
செய்வது அறியாது விழித்தவன்
விளக்கை அணைத்த பிறகு
பார்வை தெரியாது விழித்தான்
---
காலிக் கோப்பை
நிரம்பித் ததும்பியது
தேநீரின் நினைவுகள்
----
யாரை ஏமாற்றுவது
தெரியாது இருந்தான்
பெரிய ஏமாளியாக
---
ஒரு நாள் மழைக்கு
கல்லைக் காட்டிச் சிரித்தது
புதிய சாலை
----
நல்லவர்களுக்குப் பின்னால்
எப்பொழுதும் நிற்பதில்லை
நடிகனுக்கு வரும் கூட்டம்
----

பெருந்தலைகள்
அனைத்தும் ஒரு காலத்தில்
தருதலைகள்

புண்பட்ட மனதை
புகை விட்டு ஆற்றினான்
சாம்பிராணி போடுபவன்
----
நின்றுகொண்டு இருந்தவன்
விழுந்து விழுந்து சிரித்த தருணமும்
நின்று கொண்டே இருந்தான்
----
முதுகில் குத்தியவன்
வயிற்றில் குத்துவதற்கு முன்
வந்தது சிறுநீர்
---
எட்டி உதைத்தவனுக்கு
ஒன்றும் புரியவில்லை
தடுக்கி விழுந்த தருணம்
-----
நீண்ட நாள் ஆசை
நிறைவேறிய ஆசையில்
அடுத்த ஆசைக்கு ஏங்கினான்
-----
இது ஒன்றும் புதிதல்ல
கவலையிலும் சிரித்தாள்
பல்விளக்கி வந்தவள்
----
கடைசி மலரையும்
கசக்கி எறிந்தவள்
கூட்டிப் பெருக்கினாள்
----
ஆயிரம் கிழிச்சல்கள்
உடையில் பார்க்கலாம்
வசதியான வீட்டுப்பெண்
---
நீண்ட கூந்தல் அழகி
பார்த்துகொண்டே இருக்கலாம்
சவுரியில் இருக்கும் வரை
----
பிரியாணி அண்டாவைப் பார்த்தான்
கனத்த மனத்துடன்
சஷ்டி விரதம் இருந்தவன்
---

யாருக்கும் அடங்காதவன்
அடங்கிப்போனான்
சவப்பெட்டிகளுக்குள்
---
எந்தக் கோமாளியும்
மனம்விட்டு சிரித்ததில்லை
இந்த உலகில்
---
மாய உலகம்
அனைத்தும் மாயமாகவே தெரிகிறது
ஏழையின் சிரிப்பை போலவே
---
எதிர்காலத்தை பற்றி
ஆழ்ந்து சிந்தித்தவன்
உறங்கிப்போனான்
---
இரத்தம் பார்த்த கத்தியினை
நித்தம் பார்த்து இரசித்தான்
சித்தம் கலங்கிப்போனவன்
----
நேற்று இரவு
நீ கொடுத்த முத்தத்தில் கன்னம்
எச்சில் ஆனதுதான் மிச்சம்
-----
முழுதும் விலகிவிட வேண்டும்
முடிவு செய்த பின்னரே
சேர்த்து வைக்கிறது வாழ்க்கை

- மாமதயானை, புதுச்சேரி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.