கீற்றில் தேட...

1
மூலவரைத் தரிசிக்க
உத்தரவு வேண்டியாவது
வருவார்களென
பொறுமையாய்க் காத்திருக்கிறது நந்தி

2

காண்போரின் கணக்கற்ற வேண்டுதல் விண்ணப்பங்களால்
மூலவர் வரை நீண்டு விடுகிறது மனிதரைப் பார்க்கையில்
நந்தியின் காது

3
வணங்குவோம் முதலில்
வசவுகளையும் வசதிகளையும் வாங்கிய பின்பும்
உருமாறிப் போகாத
பொறுமையின் இலக்கணமான
நந்தியின் காதுகளை.


4
மாதத்தின் நாட்களிரண்டில்
குவிந்திடும் வேண்டுதல்களுக்கே
சலித்திடும் மனதில்
மூலவரின் நின்றசீர் நெடுங்காதையைக் கேட்டதும்
வடியத் தொடங்குகிறது
நந்தியின் காதிலிருந்து
கருணையின் ஈரம்.

5
புலம்பல்கள் புகழ் மாலைகள்
துன்பத்தின் விசும்பல்கள்
தோள் தாங்கும் பரிசுகளென
சமமாகிப் போன மனதை
பிறர் நலம் கேட்டதும் பொறாமையிலும்
பிறர் துயர் கேட்டதும் செவிமூடுவதுமென
பாவனைக்கும்
மனிதனுக்குக் கொடுத்திடாமல்
தன்னுள்ளேயே புதைத்துக் கொள்கிறது எப்போதும்.

6
எப்போதும் கரைந்து போவதில்லை
எல்லோர் துயரங்களையும்
ஏந்திக்கொள்ளும்
நந்தியின் காதுகள்.

7
தரிசனத்தின் காத்திருத்தலிலாவது
கடைக்கண் கிடைக்குமென
மனிதர்களின் வரிசைக்குள்
அமர்ந்திருக்கும்
நந்தியின் பொறுமைக்கு
கடவுளின் முகமெலாம்
வெளிச்சத்தின் வீச்சு குறைவாகலாம்.

8
கேட்பதிலும்
சுமையைத் தாங்குவதிலுமென
நிம்மதி கிடைக்குமென்றே
மனிதர்களின் வேண்டுதல்களை
மனமுவந்து கேட்கிறது
நந்தியின் கருணை.

9
கவலைகளை
கட்டணமென வசூலித்துக் கொண்டு
வருத்தங்களை வழியிலேயே
தொலைக்கும்படி
காதுகளில் வாங்கிக்கொண்டு
மகிழ்வின் வரம் வேண்டி
மனிதரின் மனங்களை
சிவனிடம் அனுப்பும்
வாசல் நந்திக்குத்தான்
பேரன்பின் வாசம்.

- இளையவன் சிவா