நீ என்பது நினைவுகளே
அதை உடன் இருப்போர்களுக்கு
விட்டுச் செல்வதே நல்வாழ்வு
*
மழை பெய்வது இருக்கட்டும்
அதற்கு முன்
மனம் பெய்து தொலைக்கிறதே
*
எரிந்து தீர்ந்து விட்டது சுள்ளி
அள்ளிப் பருகிய நெருப்போடு
கிளம்பி விட்டது குளிர்
*
பூக்களுக்கும் கால்கட்டா
எத்தனை லாவகமாய் போடுகிறாள்
அம்மா
*
இறங்கும் கால்கள்
நீரின் கழுத்தை மிதிப்பதாகவே
ஒரு தோற்ற மயக்கம்
*
நிலவுருட்டி வந்து
உன் வாசலில் நிறுத்தியிருக்கிறேன்
ஒளியூட்டி அனுப்பு
*
குளித்து சுத்தம் ஆகி
பூஜைக்குப் போவது போல அல்ல
காதல் கவிதைக்கு ஒரு கசகச தேவை
*
போற போக்குல வாழக்கூடாது
போகும் வழியெல்லாம்
வாழ வேண்டும்
*
வலை வீசிப் பிடிப்பதில்
ஒரு தன்மை இருக்கிறது
தூண்டிலிடுவது துரோகச் செயல்
*
பூ அவிழ்கிறது
வாசத்தின் அம்மணம்
அரூபத்திலும் அழகு
- கவிஜி