கீற்றில் தேட...

1.

உன்னை நினைவுபடுத்தும்
எல்லாவற்றிலிருந்தும்
விலகி நின்று பார்க்கிறேன்.
ஆனால் என்னிலிருந்து
என்னால் ஒருபோதும்
விலக முடியவில்லை

---

2.

பெரிய கதவுகள்—
பெரும்பாலும்
மூடியே இருப்பவைதான்.

---

3.

நீ என்னை விரும்புகிறாய்
என்று நினைத்துக்கொள்கிறேன்;
குறைந்தபட்சம்
என் நினைவுகளையாவது
சமாதானப்படுத்திக் கொள்ள.

---

4.

நிராகரிப்புகள்
வருத்தமளிக்கின்றன;
ஆனால்
அச்சுறுத்துவதில்லை.

நிபந்தனையற்ற அன்பு
சந்தோஷப்படுத்துகிறது;
ஆனால்
பயமுறுத்துகிறது.

---

5.

புலம்பலுக்கும் கவிதைக்கும்
சின்ன வித்தியாசம் தான் —
உனக்குப் பிடித்தால் கவிதை,
பிடிக்காவிட்டால்…
புலம்பல்.

---

6.

நிராகரிப்புகளை
நேசிக்கிறேன் நான்.

என்னை நேசிக்காதவர்களையே
நேசிக்கும் போது,
என்னை நேசிப்பவர்களை
நேசிக்காமல்
எப்படி இருக்க முடியும்?

ஆகையால்
நிராகரிப்புகளையே
நேசிக்கிறேன் நான்.

---

7.

உன் அன்பிற்கு ஈடாகவும்
அதிகமாயும் வைக்க
ஆயிரம் மடங்கு அன்பு
என்னுள் உண்டு.

ஆனால்
உன் நிராகரிப்பிற்கு ஈடாக
வைக்க —
இந்தக் கவிதையைத் தவிர
வேறொன்றில்லை.

என்னை விடவும் அதிகம்
நிராகரிக்கப்பட்டதும்,
என் கவிதையை விடவும்
வேறொன்றில்லை.

கவிதையோடு தான்,
கவிதைக்குள் தான்,
கவிதையால் தான்,
இந்தக் கவிதையாகத்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

- அ.சீனிவாசன்