கீற்றில் தேட...

எனக்குள்ளிருக்கும் பூதம்
எழுந்து போய்
நிலவைப் புணர்ந்து விட்டு
விண்மீன்களை கூழாங்கற்களாக்கி
நதியில் உருட்டி விளையாடியது

நான் வெறும் யாசகன் மட்டுமே

தாமரை இலையில் படுத்திருக்கும்
தலைப்பிரட்டையும்
சேற்றுக்கு அடியில் புதைந்திருக்கும்
அயிரை மீனும்
நீந்தும் போது ஒன்று தான் என்றாலும்
அவைகள் எப்பொழுதுமே அப்படி இல்லையே

ஒரு நள்ளிரவில் ஒரு தேன் கூட்டைப் போல
தொங்கிக் கொண்டிருக்கும்
வானத்தைப் பார்க்கும் போது
நட்சத்திரத் தேனீக்களில் ஒன்றை
பிடித்து வந்து வளர்க்கத் தோன்றியது

சட்டென்று நதியில் அள்ளினேன்
பாயும் தேனை

விரலிடுக்குகளின் வழி
வழிந்தோடியது
வெண்ணிறப் பால்

அம்மை முலையுண்ணும் குழவி
அரை நூற்றாண்டிற்குப் பின்
நதிக்குள்ளிருந்து எழுந்து வந்தது
வாயைப் பிளந்தபடி

உன்னை தொலைத்த இடத்திலேயே
கண்டு கொண்டது எப்படி என்று
நான் கேட்கும் முன்பே
வெண்ணிற நதியை
அது விழுங்க ஆரம்பித்து விட்டது
அளவற்ற தாகத்தால்

என்னிலிருந்து பயணித்து விட்ட
பூதத்தையும்
என் நதியைக் குடித்துக் கொண்டிருக்கும்
சிறுகுழவியையும்
ஒரு சேர தரிசிக்கும்
பார்வையாளனாக நின்று
வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்தேன் நான்

- தங்கேஸ்