சின்னச் சின்னதாய்
தூறல்கள் விழுகின்றன

சின்ன தூறல் தானே
சட்டென்று நின்றுவிடும்
குடையெல்லாம் தேவையில்லையென
வெளியே கிளம்புகிறார் கணவர்

அதே நேரத்தில்
பெருமழை வேண்டி
வாசலில் காகிதக் கப்பலோடு
காத்திருக்கிறாள் மகள்
என்ன செய்யும் இப்போது மழை?

*****

வழியே இல்லையென புலம்புகிறேன்
எப்படியாவது, எங்கேயாவது
வாயிற் கதவுகள் அமைத்து
வீட்டுக்குள் ஒரு வீட்டைக்
கட்டிக் காட்டுகின்றன எறும்புகள்

*****

சமத்துவம்

மகிழ்ந்து போகாமல்
வேறென்ன செய்வார்கள் மனிதர்கள்
யார் வந்து நின்றாலும்
ஆசையாய் ஓடிவந்து
காலில் விழுந்து வணங்கி
சமமாகவே வரவேற்கிறது கடலலை!

*******

நல்லவேளை...

இரண்டு வருடங்களாக
ஆளில்லாத வீட்டின்
வேப்ப மரத்தின் சருகுகளை
பெருக்கித் தள்ளுகிறேனென
அப்படியும் இப்படியுமாய் அலைக்கழித்து
பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
அந்த எதிர் வீட்டுப்
பெண்கள் இருவரும்…
நல்ல வேளை
பெயர்த்தெடுக்க முடியாததால்
தப்பித்தது நிழல்

- பி.ஹேமா, முசிறி