உன்னை நினைக்கும் போதெல்லாம்
உன் முகம் ஞாபகத்திற்கு வருவதில்லை
சொற்கள் தான்
ஒலிகளால் நிரம்பியது தான்
வாழ்க்கை என்றிருந்தாய்
மெளனம் கடைசி வரையிலும்
உன்னிடம் பேசிவிட
ஒரு பூனைக்குட்டியைப் போல்
உரசி உரசி வந்தது
நீ யாரை சந்தித்தாலும்
சோழி உருண்டைகளைப் போல
வார்த்தைகளைத்தான்
தந்து சென்று கொண்டிருந்தாய்
நான் உன்னை சந்தித்த போது
ஒசையில்லாமல் மலர்ந்த
ஒற்றை மலரை
உன் கையில் தந்தேன்
இரண்டு சொற்களுக்கு
இடையில் கிடந்த
பெரும் மௌனத்தில்
நீ அதை விட்டெறிந்தாய்
அது ஒரு புழு போல்
ஊர்ந்து செல்வதைப் பார்த்து விட்டு
நான் விடைபெற்றேன்
- தங்கேஸ்