அரசியல் கட்சிகளின் ஆளுமையென
தலைமையில் இருந்தார்கள்.
ஆங்காங்கே
அரசு அதிகார மையங்களிலும் இருந்தார்கள்.
ஒடுக்கப்பட்டவரென ஓரங்கட்டப்படாமல்
பழங்குடியானாலும் ஜனாதிபதியாக
பதவியில் இருந்தார்கள்.
மத நல்லிணக்க மாண்பாக
எல்லா மதத்தவர்களும்
பிரதமராக இருந்தார்கள்.
நீதி பரிபாலன
நிர்ணய மன்றங்களில்
சமூக நீதி
சமத்துவம் கண்டதற்கு
சாட்சியாக இருந்தார்கள்.
இத்தனையாக இருந்தும்
காலச் சக்கரத்தில்
யுகங்கள் கடந்து
தாவிப் பார்க்கையில்
வாலாட்டிய
வாடகை வாய் நாய்களின்
வாரிசுகளும்
ஆவணங்களைப்
புரட்டிப் புரட்டி
அலுத்துப் போன தலைமுறையாக
கல்லுடைத்து, மண் தூக்கி,
சுரங்கத்திற்குள் சுருண்டு
வாழ்வதன் பொருட்டான
வீழ்ந்த கதையின்
விடை தெரியாமல்
வரலாற்று ஆவணங்களை
ஆராய்வதிலேயே
செத்து மடிந்து
செயலாற்ற முடியாமல்
இருந்தார்கள்.
- ரவி அல்லது