கீற்றில் தேட...

1. ஆசைகள்

நிறைவேறாத அவ்வளவு ஆசைகளையும்
மடித்து முடித்து வைப்பதற்கென்றே
இடம் ஒதுக்கி விட்டோம்
மன இடுக்குகள் திணறுகின்றன..

திடீரென பழக்கப்பட்ட ஒருவர்
பழக்கப்படாத தொனியில்
உன் ஆசைகளைச் சொல்
கேட்போம் என்கிறார்

மனமுடிச்சுகள் மெல்ல
அவிழத் தொடங்குகையில்
ஓர் ஆசை
தானே நிறைவேறிக் கொள்கிறது.

2. நிலையற்ற நிலை

பிரிவும் இணைவும்
கட்டித் தழுவாத மையத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்
பிரிவின் வலியோ
இணைவின் இறுக்கமோ
அற்ற நிலை அது

ஆறுதல் சொல்லலாம்
அணைத்துக் கொள்ள முடியாது
சந்தோஷப்படலாம்
கொண்டாடித் தீர்க்க முடியாது
கை கொடுக்கலாம்
கை கோர்க்க முடியாது
கோபப்படலாம்
உரிமை கொள்ள முடியாது

இருந்தும்
ஏதோ ஒரு வகையில்
ஏதோ ஒரு வடிவில்
ஏதோ ஒரு விதமாய்
இருந்து கொண்டிருக்கும் நடுநிலையே
போதுமானதாய் இருக்கிறது
போதாது என்றபோதிலும்..

- ஷினோலா