தெரியாமல் முட்டிவிட்டு
முன்னோக்கி நகர்ந்திருக்கும்
முட்டியதில் நிலை இழந்த
மேல் ஒதுக்கி வைக்கப்பட்ட
அரை கல்
பின்னாடியே உருண்டிருக்கும்
அம்மிக்கல் நடுவினில்
உருண்டு ஊஞ்சலாடிய
கல்லினடியே
எதிர்பாராமல் நசுங்கி
மரணித்திருக்கும்
ஆகப் பெரிய
தற்கொலையை
நிகழ்த்திய தவளை
அம்மியில் நசுங்கிக்
கிடப்பதை மறந்து
பார்ப்பவர் பரிதவிப்பில்
இன்னும் தாவிக் கொண்டிருக்கும்
- கவிஜி