யாரும் யாருடனும்
பேசிக்கொள்ளாத இரவு
நிலவுகிறது ஒரு மௌன பிளவு
பெருமூச்சுகளே பெரிதும் கேட்கும்
அவ்வேளையின் நிசப்தத்தில்
நிழலாடுகிறது கரிய ஒளி..
சட்டென நினைவு வந்தவர்களாய்
மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்ற
குழந்தையின் அழுகைக்குப் பால் கலக்க
கதவை அடைத்து தாழிட
சுருட்டிய மெத்தைகளை விரிக்க
என ஆளுக்கொன்றாய்
நகர்ந்த பின்னரும்
தேங்கியிருக்கிறது..
நகர மறுக்கும் ஒரு நினைவு
அவரவர் மனதை
ஆங்காங்கே இறுக்கியபடி..
- ஷினோலா