வனம் கடக்கிறேன்
வழி நெடுக
கர்ப்பிணிப் பாறைகள்
*
மழைக்குள் நின்ற நாய்க்கு
காதுகள்
தோகை விரிக்கின்றன
*
வானத்தில் குதிக்க உந்திய பூமி
ஞாபக மறதியில்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறது
*
அருவியை வயிறு முழுக்க
குடித்த வெற்றிடம்
பிறகு புள்ளியளவு பூமி ஆனது
*
உருளத் தொடங்கும் போது
மிரட்சி இயல்பு
மீறுவது சுகம் சுகம் பாறைக்கு
*
பச்சைப் பசேல் பரந்து விரிகிறது
நிறம் உதிர்த்தபடியே பறக்கிறதோ
பச்சைக் கிளிகள் ரெண்டும்
*
எதிர் வீட்டுக்கு
முதுகு காட்டாத
கதவை மாட்டு
*
வெட்ட வெளியில்
ஒற்றை மரம்
ஒய்யார நிர்வாணம்
*
கடைசி மின்னல்
காட்டிக் கொடுத்தது
காற்றின் கரத்தை
*
கண்களால் புகைப்படம் எடு
இல்லையெனில்
சுற்றுலா வந்த வெற்று கேமரா நீ
- கவிஜி