யாவையும்
துறந்தவர்களுக்குள்
நிறைந்து கிடக்கிறது
அல்லாதவைகளின்
பொல்லாப்புகள்
அணுக்கம் கொண்டு
நிர்வாண ஆடையுடுத்தி.
விமோஷனங்களுக்கு
வழிகளற்று விளைகிறது
குரோதங்கள்
ஸ்வரமற்ற ஸ்மிருதிகளால்.
மிலேச்சர்களின்
மேனிகள் பட்டு வரும்
கங்கையில்தான்
ஆதர்ஷ புரிதல்கள்
இருக்கிறது
ஆகர்ஷிக்கும்
ஷாஹி ஸ்னானமென.
கசடான கரியமில வாயுவை
உள்ளிழுத்து
காலமெல்லாம்
காற்றில் ஆக்சிசனேற்றம்
செய்கிறது
மரங்களின் பெயர்களில்
மாறுபட்டாலும்
குணத்தினில் மாறாமல்
கும்பத்தில் வைத்து
கொண்டாடுமாறு.
மயக்கும் மனம்
மாறிடாத இழிவில்
திசைகளெங்கும் திரிந்தாலும்
தீண்டாத தென்றல்
கிடைத்திடுமா
திருவோடு
திருமண்ணில்
கலந்திருக்கும்
திகைக்கும் உண்மைகள்தான்
மறைந்திடுமா
தெருவோரம் அரங்கேறும்
தீட்சண்ய நாடகத்தால்.
பெயர்ப் பலகைகளில்
பிரித்தறிந்து
பேண நினைக்கிறது
பிரபஞ்ச பிரவாகத்தை
உணவுக்குள்
ஒளிந்திருக்கும்
ஓராயிரம் தீண்டல்களை
உணராமல்,
கர்ம வினைகள் போக்கும்
கலைய உபாயங்கள்
கலவரத்தை தூண்டுமென்பதை மறந்து.
அரசியல் பேய்கள்
ஆலாபனைகள் செய்கிறது.
மனப் பேய் மனிதர்களின்
புனிதப் பொல்லாப்பில்
நீதிக்குள் அநீதியை
அட்சரப் பிசகுகளில்
அணுக்கமாக்கும்
சூழலியல் சூட்சிகளால்
வேத ஆகம
வியாக்கியான
துணைகொண்டு
கும்ப மேளாவுக்குள்
கொடூரத்தை நிகழ்த்திவிடும்
தருணம் பார்த்து.
- ரவி அல்லது