இப்போதெல்லாம் எட்டிப் பார்ப்பதில்லை
உன் எமோஜி
தலை முட்டிப் பார்க்கிறது
*
உயிர் நோக ஆடு கத்திய அதிர்வு
ஒரு பிடி கறி சோற்றில்
ஒளிந்திருக்கிறது
*
தேநீர் அருந்துகையில்
நிலை குத்தும் கண்களில்
அரூப தூரம்
*
சிந்தனையைத் தடுக்கும்
புதுக் கண்ணாடி
புதுச் செருப்பும்
*
தொங்கு பாலத்தில் நடக்கும்
கால்களில்
பத்து கண்கள்
*
அன்றில் பறவை என்றா நினைத்தாய்
அந்தந்த நாளின் பறவை
நான்
*
கடித்த நவாப்பழம் தருகிறாள்
கடித்த வாயல்லவா
இனிக்கும்
*
வெறும் சிறகுகள்
வேலைக்காகாது
வானம் கேள்
*
தூங்கினால் கெட்டுப்போகும்
கல்வீசி உறக்கம் களை
உழைக்கட்டும் குளம்
*
அத்தனை ஆர்வமாய் சென்றது
கடலை மிதிக்கவா
சற்று தள்ளி நின்று கண்களால் வணங்கு
- கவிஜி