பாடகனை நீ கூண்டில் அடைக்கலாம்
ஆனால் பாடலை அப்படிச் செய்ய முடியாது
செந்தனலின் மீது நீ நீரூற்றி அணைக்கலாம்
ஆனால் சாம்பலின் சூட்டை உன்னால் தணிக்க முடியாது
நாட்டியக்காரனின் நடனத்தை நீ நிறுத்தி விடலாம்
ஆனால் இதயங்களிலும் அதன் விழிகளிலும்
அவன் ஆடுவதை உன்னால் தடுக்க முடியாது
காற்று புலம்பலின் ஒலியைச் சுமந்து செல்லலாம்
ஆனால் மேலிருந்து மேகங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
பூமியின் குழந்தைகள் அழுவதைப் பார்த்ததும்
அவை கண்ணீர் சொரிகின்றன
உடைந்துபோன அவை புழுதியாய் அமுங்குகின்றன
ஆனால் உயிரளிக்கும் அமிர்தமாய்ச் சொரியும் மழைத்துளிகள்
அந்தப் புழுதியில் பசுமையைத் தழைக்கைச் செய்யும்
மீண்டும் பூக்கள் பூக்கச் செய்து ஆயிரம் விதைகளை
காற்றில் வெடித்துச் சிதறச் செய்யும்
உன் கூச்சலுக்கும் அச்சுறுத்தலுக்கும்
பெண்களாகிய எங்களை அவமதிப்பதற்கும்
என்ன விலை?
உன் வழுக்கிச் செல்லும் பிடியோ
உன் சூறையாடலோ
எங்கள் தூய்மையைக் கெடுத்துவிடும் அளவுக்கு
எங்கள் பெருமிதம் ஒன்றும் பலவீனமானதல்ல.
எங்கள் துணிவும் எங்கள் வலிமையும்
எங்கள் இரத்த நாளங்களிலிருந்தும்
இந்தப் பூமியில் நாங்கள்
துள்ளியெழுந்த நாளிலிருந்தும் வருகின்றன
உனது தலையிலிருந்தோ வயிற்றிலிருந்தோ
தொடைகளிலிருந்தோ நாங்கள் வந்ததாக
நீ கூறிக்கொள்ளலாம்
ஆனால் அப்போதும் நாங்கள் எங்கள் அன்னையாகிய
பூமியின் மீது தான் நிற்கிறோம்
நீ எப்போதோ போய்விட்டாலும்
உயிருள்ள சதையிலிருந்து
ஊற்றுக்களாகப் பொங்கிவரும்
உன் இரத்த தாகம்
பசித்திருக்கும் பலவீனமான பெண்களிடத்து
வீணாகத் தணியும்
உன் வலிமையை நீ செலவழித்துவிட்டாய்
எங்கள் மனிதத் தன்மை அப்படியே இருக்க
நாங்கள் ஆற்றலுடன் எழுந்துவருவோம்
பூமியின் கருவறைக்குள் நாங்கள் காணாமல்
போய்விட மாட்டோம்
அதன் உள்ளேயிருந்து
எங்கள் இரத்த நாளங்களுடனும்
தசைநார்களிலிருந்தும் இளமையின் உத்வேகத்துடன்
உயர்ந்து எழுந்து வருவோம்
பாடகனை நீ கூண்டில் அடைக்கலாம்
ஆனால் பாடலை அப்படிச் செய்ய முடியாது
செந்தனலின் மீது நீ நீரூற்றி அணைக்கலாம்
ஆனால் சாம்பலின் சூட்டை உன்னால் தணிக்க முடியாது
பேணிக்காக்கும் கருவறை கல்லறையாகும் போது
அடைகாக்கும் கருவி பிணம் எரிக்கும் கருவியாகிற போது
நான் கூச்சலிடுவேன்
என்னை மௌனிக்கச் செய்ய முடியாது
ஞானிகளும் முதியவர்களும் பிணியகற்றுவோரும் கூட
மரணத்தின் முகவர்களாக ஆகிறபோது,
மருத்துவ அறிவு அதன் அறத்தை
வணிகத்திடம் இழக்கிறபோது,
அறுவை மருத்துவரின் கையுறைகள்
கொடிய பறவையின் கூர்நகங்களாக
இன்னும் பிறக்காத பெண் இரத்ததால்
சிவக்கிறபோது,
என்னால் வாய்மூடி இருக்க முடியாது
செல்வத்தின் கடவுளான லட்சுமி
இல்லத்தில் அருள் பாலிக்கிறபோது
மனிதர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள்
என்று சொல்கிறார்கள்
அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு
பெரிய நன்மைகளைக் கொண்டுவரலாம்
ஆனால் அவை இன்னும் பிறவாத ஒன்றுமறியா
பெண் குழந்தைகளின் இரத்தத்தில் நனைந்திருக்கும்
வெண்ணிற ஆடையுடுத்திய கல்விக்கான கடவுளான
சரஸ்வதியே உனது வீடு பெரியது, உனது பட்டங்கள் நீண்டவை
உனக்குக் கார்கள் ஏராளம்! அவற்றின் சக்கரங்கள்
உருளும்போது அவற்றிற்கு கீழே
சிவப்புத் தடங்களை விட்டுச் செல்கின்றன
ஆனால் முதிராச் சோளக் கதிர்களின் மீது
கூட்டமாக வந்திறங்கும் குருவிகளைப் போல
எம் மீது வந்திறங்கும் எம கிங்கரர்களைத் தான்
நாங்கள் பார்த்து வருகிறோம்
இந்த நிலம் பேரழிவுக்கு உள்ளாகட்டும்
வயல்கள் மலடாகித் தரிசுகளாகட்டும்
ஆறுகள் வறண்டு போகட்டும் மழை பொய்த்துப் போகட்டும்
பெற்றோர்களும் பாட்டன் பாட்டிகளும் மருத்துவர்களும் செவிலியரும்
வழக்கறிஞர்களும் நீதிபதிகள் அனைவருமே
எங்களுடைய வாழ்க்கையைப் போலவே
அவர்களுடைய வாழ்க்கையும்
உடைந்து நொறுங்கக் கூடியது விலமதிப்பற்றது
என்றேனும் ஒருநாள் செத்துப்போக விதிக்கப்பட்டது
என்பதை மறந்துவிட்டார்கள்
அவர்கள் தங்கள் மனங்களையும் காதுகளையும் கண்களையும்
மூடிக் கொண்டிருக்கிறார்கள்
எங்களைக் காணாதவர்களைப் போல கருதிக்கொள்வதில்
அவர்கள் வெற்றிபெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்
ஆனால் அவர்கள்தாம் பார்வையற்றவர்களாக, காது கேளாதவர்களாக
உணர்ச்சியற்றவர்களாக, சவங்களைப் போல இருக்கிறார்கள்
அவர்கள் தங்களுடைய மனச்சாட்சிக்கு சூடு வைத்துக்கொண்டிருக்கலாம்
ஆனால் நாங்கள் – எங்கள் உணர்வுகள் – நிலத்திற்கு மேலே பறந்து
வானத்தை இருட்டாக்கி வைத்திருக்கின்றன
செய்தி இதுதான்:
இன்னும் நாங்கள் உயிர் வாழ்கிறோம்!
எங்கள் உணர்வுகள் ஒன்றுதிரண்டு நிலத்திற்கு மேலே பறந்தபடி
காத்துக்கொண்டிருக்கின்றன
ஒருநாள் எங்கள் துக்கம் தீரும்
எங்கள் இயல்புமாறிய விழிகள் சிந்தாத கண்ணீர்
வானிலிருந்து உப்பு நீராய் பொழியும்
அவர்களே தோண்டிக்கொண்ட புதைகுழிகள்
அவர்களை விழுங்கும்
எனவே அந்த நாள் வரும்வரை
இரக்கம் அவர்களைப் பொறுத்துக் கொண்டிருக்கும்
நானும் எனது ஒலிக்காத அழுகையை
எனது இயல்பில்லாத தொண்டையிலிருந்து
அழுவேன்
“இல்லை, இல்லை, எங்களை வாழ விடு,
அதனால் நீயும் வாழலாம்
நான் மௌனமாக இருக்க மாட்டேன்.
_________________________________________
சிந்தியா ஸ்டீபன் சுதந்திர எழுத்தாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். கவிதை: Justice Collective 2018,
நன்றி: ஜனதா வீக்லி

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It