பழகுவதற்கு இலகு பிசாசு தான்
பார்ப்பதற்கே
பிகு காட்டுகிறவன் கடவுள்
கடவுள் கருணையுள்ளவன் தான்
பிசாசு தான் கடமை உள்ளவன்
பிரார்த்தனைக்குப் பழகியவன் கடவுள்
பழக்கத்துக்கே பழகுகிறவன் பிசாசு
வேண்டி உருகினால் தான்
வரும் ஒழுங்கு கடவுளுக்கு
பிராண்டி விஸ்கிக்கே
தரமாய் வருகிறவன் பிசாசு
இறுக்கத்திலேயே
இதயம் செய்வான் கடவுள்
இறுக்கி அணைத்து உம்மா
தருகிறவன் பிசாசு
உடல் என்பது கோயில் என்று
உளறுவான் கடவுள்
உடல் என்பது வீணை
மீட்டென்பான் பிசாசு
பிசாசின் மகிமையே
கடவுள் வேஷமிட்டு
இப்படி எடுத்துரைப்பது தான்
கடவுளின் கொடுமையே
அதையும் பேச விட்டு
இப்படி அமைதியாய்
கேட்டுக் கொண்டிருப்பது தான்...!

- கவிஜி

Pin It