எதற்கு இப்படி
பறந்து திரிகிறேனா
வானத்தில் ஏறி விட
நட்சத்திரங்களைக் கொய்ய
நிலவில் நிற்க
குறைந்த பட்சம்
கொய்யா மர உச்சியில்
புது காக்கையோடு
காலாட்டி அமர்ந்திருக்க...!

*
அருகே வா என்கிறதா
தள்ளிப்போ என்கிறதா
கோபமா தாபமா
பசியா இசையா
தாலாட்டுகிறதா தவிக்கிறதா
வழக்கத்தை வாசிக்கிறதா
வானத்தைப் பூசிக்கிறதா
கூவிக் கொண்டே இருக்கும்
குயிலுக்கு
என்னதான் வேண்டுமாம்
அதிராமல் கேட்கிறேன்
அதற்கும் கூவுகிறது
இப்போது
ஒரு கொத்து கவியோசை

*
கடைசி வரை அழவேயில்லை
கடைசி பிள்ளை கசடு என்று
எப்போதோ சொன்னது
நினைவுக்கு வந்து
தொலைத்து விட்டது

- கவிஜி

Pin It