இந்த உலகம் என்பது என்ன?
இழுத்தவர் பக்கம் போய்விடுகிற பெரிய மண்ணுருண்டை!
அவ்வளவுதான்.

பலர் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர்
மிகச் சிலர்
மிக மிகச் சிலர்
அதை வைத்து ‘கோலி’ ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இடையில் பல தரகர்கள்.
சிலர் சூதாடிகள்
சிலர் வாதாடிகள்
காபரே டான்சுக்காரர்கள்
பிடுங்குற வரைக்கும் பிடுங்கிக் கொள்கிற
எரிகிற வீட்டின் எதிரிகள்
பாம்புகள்
பாம்புகளின் நண்பர்களாய்க் கீரிகள்
சிங்கத்தால்
திசைக்கு ஒருவராய்த் தனித்திருந்தபோது
வேட்டையாடப்பட்ட
நான்கு பசுக்கள்
ஆலமரத்தின் கீழ் வடை சுடும் பாட்டி
திராட்சைக் குலை
சீ சீ புளிக்குமென நகரும் நரி
ஆளாளுக்கு ஒரு பாத்திரம்
அவசரமாய் நடித்துவிட்டு
புதையலை வீணடித்து நிரந்தரமாய்ப் புதைதல்!

பவளப் பாறையாய் உறைந்து கிடக்கும்
பக்குவப்படா உவமைகள்
உருவகங்கள்
நவீனம்
பின் நவீனத்துவம்
பீற்றல்கள்
பித்தலாட்டங்கள்
பொன்னால் செய்யப்பட்ட
புளுகு நாக்குகள்
கிருஷ்ணன்கள்
கம்சன்கள்
கதாநாயகனை வில்லனாய்
வில்லனைக் கதாநாயகனாய்
மாற்றி
காலம் வெளியில் உருளவிடும்
தாயங்களின் தாயாதிகள்
சகுனிகளின்
சதுரங்கங்கள்.
பீஷ்மர்கள்
கர்ணன்கள்

ஜோசஃப் ஸ்டாலினையும்
அடால்ஃப் ஹிட்லரையும்
ஒரே தட்டில் வைத்து எடைபோடும்
மோசமான தராசு.

கடவுள் உறைக்குள்
முதுகில் பாய்ச்சும்
துரோகத்தின் முள் வாள்கள்!

ஒவ்வொரு அனுபவமும் ஒரு புதினம்
எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு
தொடர்ந்து ஆறாறு மாதமாய்த் தூங்கித்
தொலைக்கும் கும்பகர்ணக் குறுங்காவியங்கள்.
குறைந்தபட்சம்
காக்கையாய் மாறும் திறனுண்டா மனுசனுக்கு?
(அந்த மிருகத்தைத்தான் பிண்டத்துக்கு அலையும்
கரும் பறவையாய் மாற்றிவிட்டதே காடையரின் காலம்!)

ஏ கறுப்பனே!
காக்கை….
அது காக்கையா?
கருந்துளைக்குச் சிறகு முளைத்தப்
பிரபஞ்சத்தின் பேரறிவு!
கடும் கானகம் முழுவதும்
தண்ணீருக்கலைந்து
கடைசியில்
கலயத்தின் அடி நீரைக்
கல் போட்டு
மேலிழுத்த மெய்ஞானம்!

இன்று நான் பிக்காசோ வாகிவிட்டேன்
நாதுராம் கோட்சேவின் பின்னணியில்
நாடாளுமன்றத்தை ஒரு நவீன ஓவியமாய் வரைந்துவிட்டேன்.
பின் நவீனத்துவமாய் ஒரு பெயரையும் சூட்டிவிட்டேன்
திடீரென வான்கோவின் ஞாபகம் வந்துவிட்டது
எஜமானின் பின்னால் போகும்
கழுத்துப் பட்டி கட்டிய
செல்லப் பிராணியை
அழகுக் கிண்ணங்களில் வார்த்த
அடிக்கும் வண்ணங்களில்
‘நட்சத்திரங்களின் இரவி’னைப் போல
நாட்டிய ஓவியம்!

எல்லாவற்றையும் இழந்த
மலையகத் தமிழனின் மகனா நீ?

சூழ்ச்சியை முறியடிப்பாயா சூத்திரா?
மாபெரும் இனம்
மண்ணுக்குள் புதைந்ததென
தோண்டி உன் பெருமை சொல்ல
தொல்பொருள் கலைஞன் தோன்றப் போவதில்லை.
எஜமானனை எதிர்த்து
எந்த அடிமை
தாகமாய் இருக்கிறதெனத்
தண்ணீர் கேட்கப் போகிறான்?

காகமாய் மாறினால்
ஏ கருப்பனே
கண்ணீர் சுனையாகும்!

- நா.வே.அருள்

Pin It