காக்டெய்ல் கடலின்
இணக்கமில்லா
சேர்க்கைகளின்
கலவையில் 
மிதந்து 
கொண்டிருக்கிறாய்...!
 
உன் லிக்கரிலுள்ள
ஆல்கஹால் 
சதவீதப் பிணைப்பின்
ஃபார்முலாவால்
அல்ஜீப்ராக்களும்
கால்குலஸ்களும்
குழப்பத்திலுள்ளது...!
 
கோப்பைக்குள் குதித்த
ஐஸ் கட்டிகள்
ஒன்றையொன்று இடித்து
உனக்கு சியர்ஸ் 
சொல்லிக் கொள்கின்றன...!
 
சிகரெட்டுக்குள்
கஞ்சாவை சரியான 
விகிதத்தில் திணித்து
மடித்துப் புகைக்கும்
லாவகம்
கற்றவன் நீ...!
 
மோலி மாத்திரை தரும்
உன் எக்ஸ்டசி கவிதையில்
குற்றியலுகரமும் குற்றியலிகரமும்
அரை மாத்திரையளவிலிருந்து
ஒரு மாத்திரையளவிற்கு
பரிணாமம் கண்டுள்ளது...!
 
நாசியில் நுழைந்து
நுரையீரலடைந்த
ஹெராயின் துகள்கள்
வலிகளுக்கு
ஆணிகளறைந்து 
சிலுவையிலேற்றிவிட்டு
உன் மூளையை
முழுவதுமாக
ஆட்கொண்டு விட்டது...!
 
நரம்பைத் துளையிட்டு
உள்நுழைந்த
கோக்கைன் துளிகள் 
பசியோடு
போராட்டம் நடத்தி
உன்னை
அனோரெக்சிக் ஆக்குகிறது...!
 
இதோ
உன் உலகம் அதன்
சுழலும் வேகத்தை
வெகுவாகவே குறைத்துக் கொண்டிருக்கிறது...
அந்தரத்தில் தொங்குகிற
மழைத்துளிகள் ஒவ்வொன்றாய்
சுண்டி விட்டு விளையாடுகின்றாய்...!
 
உன் சாலையின்
கேடிஎம் பைக்குகளுக்கு
எறும்பின் கால்கள்...
சிகப்பும் பச்சையும்
உன் கண்களுக்கு
இரண்டறக் கலந்த
ஒரே கொள்கையின் நிறம்...
உனக்காகவே 
சாலை சந்திப்புகளில்
வரிக்குதிரை கோடுகள் வரைய
பாம்புக்கு காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார்கள்...!
 
மெதுவாக நீந்திவரும்
தண்ணீர் லாரியொன்று
உனக்கு சிறகுகளை
பரிசளித்துப் போக
இப்போது நீ
வானத்தில் பறந்து கொண்டிருக்கிறாய்...!
 
- தங்கராஜ் பழநி
Pin It