அவன் ஒன்று பேசுவான்
நான் ஒன்று பேசுவேன்
பிறகு
நாங்கள் ஒன்று பேசுவோம்
பேசிப் பேசி
அவரவர் பேச்சுகளில்
வாள் வீசுவோம்
வாரி இறைக்க தேக்கி வைத்த
வியாக்கியானங்களை
மாறி மாறிப் பூசுவோம்
பெரும்புள்ளியை உருட்டி உருட்டி
உச்சியிலேறி அமரத் துடிக்கும்
அதி தீவிரம் பேசுவதாக நம்புவோம்
அறிவுடைந்த தாழியை
சும்மா எங்களை ஊற்றி தாளிப்போம்
அதி மேதா விலாசங்களை
ஒருவர் முகத்தில் ஒருவர்
வெட்கமே இல்லாமல் கிழிப்போம்
கொஞ்சம் அழுவோம்
கொஞ்சம் சிரிப்போம்
பிறகும் பேசுவோம்
உலகை மாற்றுவோம்
உலக்கையை மாற்றுவோம் என
சும்மா பிதற்றுவோம்
தலை மறைந்ததும்
மாறி மாறி திட்டி
பேசியதை எல்லாம் மறப்போம்
பிறகு எப்போது குடிக்கத் தோன்றுகிறதோ
அப்போது அலைபேசியில்
ஒருவரை ஒருவர் அழைப்போம்
பிறகு நான் அப்பிடி நான் இப்பிடி என
நான் புராணங்களை வழக்கம் போல
ஆரம்பிப்போம்
இனியும் என்ன சொல்ல
மானங்கெட்ட குடி
மானங்கெட்ட பேச்சு
மானங்கெட்ட நட்பு

- கவிஜி

Pin It