புத்தரைத் தேடுகிறேன்
விகாரைகள் காலியாயிருக்கின்றன
ரத்தம் வழிய சதைத் துணுக்கைக் கவ்வியபடி
நாயொன்று ஓடுகிறது
இரவிடம் பேசிக் கொண்டேயிருக்கிறேன்
பகலிடம் மெளனம் காக்கிறேன்
என்னோடு நடந்து வந்தவர்கள்
என்னை விட்டு ஓடுகிறார்கள்
அனல் இரும்புத் துண்டாக
ஆக்கப்பட்டிருக்கிறேன்
யாவரும் என்னை உஷ்ணப்படுத்துகிறார்கள்
குளிர வகையற்று கொதித்துக் கொண்டேயிருக்கிறேன்.

***

இசைப்பவனைத் தேடும்
இசைக்கருவி ஒன்று
நிராதரவாக
வனத்தில் கிடக்கிறது
பறவைகள் விதவிதமாய்
குரலெழுப்புகின்றன
இசைக் குறிப்புகள் வெளிகளில்
மிதந்தலைந்து.. மிதந்தலைந்து...
மூங்கில் ஊடாக
ஊடுருவிடும் காற்று
இசைஞனைக் சுமந்து வருகிறது.

***

கடற்கரையில் ஒரு நாய்
அமர்ந்திருக்கிறது தனியாக
நுரைகள் கொண்டு மோத
நீல அலைகள் கரைகளுக்கு
வந்து வந்து திரும்புகிறது
சிப்பிகள் மணலில் புதைந்து
நீரால் இழுபட்டு அலைகிறது
கடலை நோக்கியபடியிருக்கும்
நாயின் கண்கள்
தூரத்தை துழாவியபடியிருக்க
எதை.. யாரை.. எதிர்பார்க்கிறது நாய்?
பதிலுக்கான நொடி
இன்னும் கனியவில்லை.

- வசந்ததீபன்

Pin It